கோவை: பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நாளை (ஜன.22) நடைபெறவுள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாடும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோயில்களில் சிறப்பு பூஜைகள், பக்திப் பாடல்களை கூட்டாக பாடும் பஜனை, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆன்மிக அமைப்புகள் மட்டுமல்லாது, பொதுமக்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் ஏற்பாடு செய்துள்ளன. ஆனால், அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் நாளை கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதிக்கக் கூடாது என திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால், 'கோயில்களுக்கு வராதீர்கள்' என இந்துக்கள், அங்குள்ள மதச்சார்பற்ற அதிகாரிகளால் விரட்டப்படுகின்றனர். கோயில்கள் மட்டுமல்லாது, திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தனியார் இடங்கள், கோயில்களுக்கு வெளியே பொது இடங்களில் ராமர் படம் வைத்து வழிபடவும், அன்னதானம் வழங்கவும் ராம பக்தர்களும், பொதுமக்களும் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால், திமுக அரசின் கீழ் இயங்கும் காவல்துறை அவர்களை அழைத்து, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என மிரட்டியுள்ளனர். எந்தவொரு ஜனநாயக ஆட்சியிலும் நடக்காத அட்டூழியம் இது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரம், வழிபாட்டு உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.