தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"குலத்தொழிலை அனுமதிக்காத திமுகவை ஏன் எதிர்க்கவில்லை?" - வானதி சீனிவாசன் கேள்வி! - Vanathi Srinivasan

குலத்தொழிலை அனுமதிக்க மாட்டோம் எனச் சொல்லும் திமுகவை ஏன் எதிர்க்கவில்லை? என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

கூட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன்
கூட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2024, 2:14 PM IST

கோயம்புத்தூர்:குலத்தொழிலை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லும் திமுகவை ஏன் நீங்கள் எதிர்க்கவில்லை என்றும், மத்திய அரசின் விஸ்வகர்ம திட்டத்தினை தமிழக அரசு இதுவரை அமல்படுத்தாமல் இருப்பதை ஏன் கேள்வி கேட்கவில்லை? என விஸ்கர்மா சமூக மக்களிடையே பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆவேசமாகப் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிர்ப்பு:மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தவில்லை. விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதால், இந்தத் திட்டத்தில் தமிழக அரசு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. விஸ்வகர்மா என்பது குலத்தொழில் அல்ல என பாஜகவினர் கூறி வரும் நிலையில், விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, பிற சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் விஸ்வகர்மா என சான்றிதழ் கொடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கூட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி கோவை செல்வபுரம் அசோக் நகர் திருமண மண்டபத்தில், விஸ்வகர்மா சமூக அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களை அழைத்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூட்டம் நடத்தியுள்ளார்.

அப்போது, கூட்டத்தில் வானதி சீனிவாசன் பேசியதாவது, “மற்ற மாநிலங்களில் எல்லாரும் பணத்தை வாங்கிக் கொண்டு தொழிலில் முன்னேறிக் கொண்டு இருக்கிறனர். ஆனால், தமிழகத்தில் இத்திட்டத்தை தமிழக அரசு இதுவரை அமல்படுத்தாமல் உள்ளது. இந்தத் தொழிலை குலத்தொழில் என திமுகவினர் கூறுகின்றனர். குலத்தொழிலை செய்ய விடமாட்டோம் என்று கூறுகின்றனர்.

இதையும் படிங்க:மெட்ரோ 2ம் கட்ட பணி;மத்திய அரசின் பணம் எவ்வளவு?- தமிழக அரசு விளக்கம்

கைதூக்கி விட காத்திருக்கிறார்:குலத்தொழிலை அனுமதிக்க மாட்டேன் என்று திமுகவினர் சொல்கின்றனர். விஸ்வகர்மா சமூக மக்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் எதை சமூகப் பெருமை என்று பேசுகின்றீர்களோ? உங்களுக்கு பெருமையே கிடையாது என்று அவர்கள் சொல்கின்றனர். உங்களுக்கு கோடிக்கணக்கான பணத்தைக் கொடுக்க பிரதமர் மோடி காத்திருக்கிறார். கை தூக்கி விட காத்திருக்கிறார்.

பிற மாநிலங்கள் விஸ்வகர்மா திட்டத்தை அமல்படுத்தும்போது உங்களது கோபம் மாநில அரசின் மீது இருக்க வேண்டும். தமிழக அரசின் மீது உங்களுக்கு கேள்வி கேட்க முடியவில்லை. நிர்மலா சீதாராமன் ஒரு வார்த்தை கூறிவிட்டார் என்று அவரை எதிர்க்கின்றீர்கள். பிற மாநிலங்களில் விஸ்வகர்மா மக்களுக்கு நிதி கொடுக்கிறார்கள். தமிழகத்தில் ஏன் கொடுக்கவில்லை என கேட்டீர்களா?

20 ஆண்டுகளுக்கு முன்னரே நான் பெரிய வழக்கறிஞர். லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருந்தேன். அதை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு இந்த மக்களுக்காக உழைப்பதற்காக வந்திருக்கிறேன். நிர்மலா சீதாராமன் இந்த விஸ்வகர்மா திட்டத்தை இங்கே செயல்படுத்த முடியவில்லை என்று சொல்கிறார். அந்தத் திட்டத்தில் நிறைய அம்சங்கள் இருக்கின்றன. நீங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்தால் அதை சந்தைப்படுத்த உதவும்.

நீங்கள் சொல்கின்றீர்கள் அல்லவா? ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பெருமை இருக்கிறது என்று. அதுபோல, ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு பெருமை இருக்கிறது. உற்பத்தி செய்யும் ஊருக்கும் ஒரு பெருமை இருக்கிறது. கோவை டெக்ஸ்டைல் துறையில் மான்செஸ்டர் என்று சொல்வார்கள். அதற்கு இணையாக தங்கத் தொழிலில் கோவை இருக்கிறது. நேர்த்தியாக இருக்கிறது என்பதை சொல்ல வேண்டும் என்பது என் ஆசை” இவ்வாறு அவர் பேசினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details