கோயம்புத்தூர்:பொங்கல் விழாக் கொண்டாடத்திற்காக லண்டன் சென்ற பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், நேற்று (ஜன.21) இரவு கோயம்புத்தூர் திரும்பினார். அப்போது, கோவை விமான நிலையத்தில் பாஜகவினர் சார்பில், வானதி சீனிவாசனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், "லண்டனில் நடைபெற்ற தமிழ் மாணவர்களின் பொங்கல் விழா மற்றும் இலங்கை தமிழர்களுக்கான ஒரு கூட்டம் உட்பட சில நிகழ்வுகளில் பங்கேற்றேன் என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், திருவள்ளுவரையும், வள்ளலாரையும் வேறு யாரோ களவாட முயற்சிக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திக்கின்றார். இந்து ஞான கருத்துக்களை தான் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். வள்ளலாரும் இந்து சமய ஞானத்தின் கூறாகவும் விளங்கியவர். திமுக அரசு இந்த இரு தமிழ் அடையாளங்களையும், அவர்கள் இருவரும் இந்துக்கள் அல்லாதவர்கள் போல உருவத்தில் மத அடையாளங்களை தவிர்த்து விட்டு வருகின்றனர்.
மக்கள் ஏற்கமாட்டார்கள்:
இவர்களுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என பேசுகிறார்கள். இந்து மத மரபுகளை மறுதலித்து, தனியாக ஒரு தமிழ் அடையாளத்திற்குள், திராவிட அடையாளத்திற்கு நுழைய வைத்து பயன்படுத்துகின்றனர். வள்ளுவரும், வள்ளலாரும் இந்த நாட்டின் தனித்துவமானவர்கள், முதலமைச்சர் பதட்டத்திற்கு உள்ளாகி இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
உலக அளவில் திருக்குறளுக்கும், தமிழுக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருப்பவர் பிரதமர் மோடி, ஆனால் சமத்துவ பொங்கல் என்ற பெயரில் திமுக அரசு தமிழர்களுக்கான மரபு அடையாளங்களை சீரழிக்க நினைக்கிறது. சமத்துவ பொங்கல் யார் வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஆனால் கோயிலில் இருந்து தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்குகிறது. கோயில் என்பது இந்து மத பண்டிகைகளோடு இரண்டறக் கலந்தது.