வேலூர்:வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த் - அமைச்சர் துரைமுருகன் அண்மையில் நகைச்சுவை பேச்சைப் பற்றி பேசினார். அப்போது அவர், "இரண்டு நகைச்சுவையும் முட்டிக்கொண்டன. நான் இரண்டு பேருக்கும் மத்தியில் அகப்பட்டு நசுங்கிவிட்டேன். இந்த பக்கம் ரஜினி எனது ஆருயிர் கலை சகோதரர், இந்தப் பக்கம் அமைச்சர் துரைமுருகன் எனது அரசியல் தலைவர்.
இரண்டு பேருக்கும் நல்ல பிள்ளை ஆக வேண்டும் என்றால் நீ என்னவாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ரஜினி ஒரு நகைச்சுவை சொன்னார், துரைமுருகன் ஒரு நகைச்சுவை சொன்னார். நேற்று அந்த நகைச்சுவை ரொம்ப சோகமாக பேசப்பட்டு, இன்று காலை முதல் நகைச்சுவை என்பது இதுதான் என உச்சத்திற்கு வந்துவிட்டது.
இன்றைக்கு துரைமுருகன் என்ன சொன்னார் தெரியுமா? நாங்கள் நகைச்சுவையாக பேசிக் கொண்டோம். ஏனப்பா நீங்கள் பகைச் சுவையாக பார்க்கிறீர்கள் என ஒரு வார்த்தையில் முடித்து விட்டார். எங்கள் தமிழில் ஒரு பழம் பாடல் உண்டு. அதுதான் ரஜினி அவர்களுக்கும், துரைமுருகன் அவர்களுக்கும் இன்று நிகழ்ந்து இருக்கிறது.
கல்லில் விழுந்த பிளவா? தங்கத்தில் விழுந்த பிளவா? கல்லில் விழுந்த பிளவை ஒட்ட வைக்க முடியாது.
தங்கத் தட்டில் பிளவு விழுந்தால் நெருப்பு காட்டினால் ஒட்டிவிடும். தங்கம் பிளவுபடாது, கல் பிளவுபடும். இரண்டு தங்கங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்று கூறினார்.