தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நல்லகண்ணு தியாக வாழ்வு ஈடு செய்ய இயலாதது" - வைகோ புகழாரம்! - VAIKO

நல்லகண்ணு தியாக வாழ்வு ஈடு செய்ய இயலாதது. அவர் தனக்கு கிடைத்த விருது தொகைகளை கட்சிக்கும், விவசாய சங்கங்களுக்கும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நல்லகண்ணுக்கு நினைவுப் பரிசு வழங்கும் முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
நல்லகண்ணுக்கு நினைவுப் பரிசு வழங்கும் முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2024, 11:54 AM IST

சென்னை:விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான இரா.நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நேற்று (டிசம்பர் 29) ஞாயிற்றுக்கிழமை கலைவானர் அரங்கில் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ‘நூறு கவிஞர்கள் நூறு கவிதைகள்’ என்ற நூலினை வெளியிட்டு, நல்லகண்ணுவுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது. நூறு வயதைக் கடந்தும் தமிழ் சமூகத்துக்குத் தொண்டாற்ற தயாராக இருக்கிறார்” என புகழாரம் சூட்டினார்.

அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "நல்லகண்ணு சென்னையில் ஜனசக்தி பத்திரிக்கையில் மூன்று மாதம் பணியாற்றினார். நெல்லை மாவட்ட செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். ஒரே காலகட்டத்தில் பொதுவுடைமையும், இந்துத்துவாவும் வேறு வேறு இடத்தில் தோன்றியது.

நல்லகண்ணு இரண்டு வருடம் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். காவல்துறைக்கு எப்படியோ தகவல் தெரிந்து அங்கு சென்ற நிலையில், நல்லகண்ணு தாடியும் மீசையும் வைத்திருந்தார். மீசையில் நெருப்பு வைத்தார்கள், ஒவ்வொரு முடியாக புடிங்கினார்கள். இருப்பினும் நல்லகண்ணு அவர்கள் கேட்ட ஒரு கேள்விக்கும் பதில் கூறவில்லை.

இதையும் படிங்க:"பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு" - நல்லகண்ணுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

அம்பேத்கர், பொதுவுடைமை, சிறுகதைகள், கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் எழுதியிருக்கிறார் நல்லகண்ணு. தனக்கு கிடைத்த விருது தொகைகளை எல்லாம் கட்சிக்கும், விவசாய சங்கங்களுக்கும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளார். அவரது மகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார். அப்போது தங்கியதற்கான வாடகையை கட்சி அலுவலகத்திற்குக் கொடுத்தார். அவரது தியாக வாழ்வு ஈடு செய்ய இயலாதது” என்று புகழாரம் சூட்டினார்.

அதைத் தொடர்ந்து பேசிய கவிஞர் வைரமுத்து, “எளிமையில் பிறந்து எளிமையில் வாழ்ந்து வருபவர். எளிமை தான் இந்த உலகில் எளிமையானது. ஆடம்பரம் இல்லாத சொல் எளிமை. உலகத்தில் முக்கியமான பொருள் காற்று என்றால் அதுதான் இந்த உலகில் எளிமையானது. தன்னலம் மறுப்பு பொதுநல பொறுப்பு மூலம் வளர்ந்தவர். ஒருவன் இறந்தால் நான்கு மணி நேரம் தான்‌ பேசப்படும். ஆனால், நன்றி, புகழை எதிர்பார்க்காத மனிதன் தான் மகத்தானவன்.

தன் தியாகத்தை மறந்து தன்னை சராசரி மனிதனாக காட்டி கொள்பவர் நல்லகண்ணு. 1967-ல் கம்யூனிஸ்ட் தடை செய்யப்படாமல் இருந்திருந்தால் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் தான் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கும். நூறாண்ணு வாழ்வது என்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? கணையம், கல்லீரல் செயல்பட வேண்டும், குடும்பத்தில் உள்ளோர் சாகாமல் இருக்க வேண்டும், நூறாண்டு வரை உலகம் நம்மோடு இணைந்து இருக்க வேண்டும். நீங்கள் விரும்பும் வரை வாழுங்கள்” என்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details