"அரசியலமைப்புச் சட்டத்தைச் சிதைக்க நினைக்கிறார் பிரதமர் மோடி" தூத்துக்குடி: அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்புள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"அண்ணல் அம்பேத்கர் தயாரித்துக் கொடுத்த அரசியல் சட்டத்தைச் சிதைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார். அம்பேத்கர் தயாரித்துக் கொடுத்த அரசியல் சட்டத்தை மாற்றி விட்டு புதிதாகச் சனாதன சட்டத்தை அரசியல் சட்டமாக்கப் போவதாகத் தீர்மானம் போட்டுள்ளனர்.
அரசியல் அமைப்பு சட்டத்தை கை வைத்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு சிதறிப் போகும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்கிறேன். அண்ணல் அம்பேத்கர் தயாரித்துக் கொடுத்த அரசியலமைப்புச் சட்டம் எல்லா கோணத்திலிருந்தும், உலகத்தில் உள்ள அரசியல் அமைப்பு சட்டத்தை விடச் சிறந்த சட்டமாகும்.
அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்காக, சமுதாயத்தின் விளிம்பின் ஓரத்தில் தள்ளப்பட்டவர்களுக்காக, அண்ணல் அம்பேத்கர் வாழ்நாள் முழுவதும் போராடினார். தந்தை பெரியாருக்கு உற்ற நண்பர் அண்ணல் அம்பேத்கர். அவர் மறைந்தாலும், கிராமங்களில் சிலை வடிவில் இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி ஒரு தெரு ஓரத்திலிருந்து கத்துபவர் போலத் தமிழகத்திற்கு 9 முறை வந்து சென்றுள்ளார்.
பாஜகவினர் அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரைத் துண்டாடி விட்டார்கள். அதில், பாஜக வெற்றி பெற மாட்டார்கள். அரசியல் சட்டத்தில் கை வைத்தால் தேசிய ஒருமைப்பாடு உடைந்து போகும். மதச்சார்பற்ற தன்மையும், சமூக நீதியும் ஆபத்திற்குள்ளாக நேரிடும்" என்று பேசினார்.
இதையும் படிங்க:ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பத் திட்டம்? - NAINAR NAGENDRAN MONEY SEIZED