மதுரை:தமிழ் கடவுளாகப் போற்றி வணங்கப்படும் முருகனுக்கு வைகாசி விசாகம் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவாகும். இந்நாளில் அனைத்து அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் பெருந்திரளாகத் திரண்டு முருகனை வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று வைகாசி விசாகப் பெரும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பால்குடம் சுமந்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரை ஆக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வருகை புரிந்தனர்.
இந்த ஆண்டுக்கான விசாகத்திருவிழா, கடந்த 13ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகன் தெய்வானையுடன் உற்சவர் சன்னதியில் இருந்து கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்திற்கு வந்து அங்கு நீர் நிரப்பப்பட்ட தொட்டியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளுவார்.
வசந்த உற்சவத்தின் நிறைவு விழா நேற்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.விசாகத்தையொட்டி அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடைபெற்றது.