சென்னை ஐஐடியில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு சென்னை: சென்னை ஐஐடியில் முதல் முறையாக இளங்கலை படிப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கையில் 30 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த விளையாட்டு வீரர்கள் சேர்க்கையை (Sports Excellence Admission – SEA) 2024-2025 கல்வியாண்டில் இருந்து அறிமுகப்படுத்த உள்ளது.
அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு இளங்கலைப் படிப்புகளிலும், மாணவிகளுக்கு 1 முதல் 2 இடங்கள் வரையிலும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், இத்திட்டம் தகுதியான மாணவர்களை தங்களது விளையாட்டுகளில் தொடர்ந்து நீடிக்கச் செய்வதுடன், உயர் கல்வியைத் தொடரவும் ஊக்குவிக்கிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளுக்காக, சென்னை ஐஐடி தனி இணைய முகப்பை உருவாக்கி, இது குறித்த அனைத்து விவரங்களுடன் கூடிய https://jeeadv.iitm.ac.in/sea/ என்ற இணையதளத்தினை சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி இன்று (பிப்.06) துவக்கி வைத்தார்.
இது குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "இளம் விளையாட்டு வீரர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதுடன், அவர்கள் தங்களது விளையாட்டுகளை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கண்ணோட்டத்துடன் புரிந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. சென்னை ஐஐடியில் விளையாட்டு தொடர்பான பல்வேறு விருப்பப் பாடங்களும், பல்வேறு அதிநவீன வசதிகளும் இடம் பெற்றுள்ளன.
எதிர்காலத்தில் மேம்பட்ட உபகரணங்களுடன் கூடிய விளையாட்டு வளாகம் ஒன்றைத் தொடங்கவிருக்கிறோம். இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை தொடங்க இருக்கிறது. சென்னை ஐஐடியில் பயிலும் மாணவர்கள், உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களாக மாற வேண்டும் என விரும்புகிறோம்.
இந்த திட்டத்தின் மூலம், மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பில் பொதுப் பிரிவினர் 75 சதவீதம் மதிப்பெண்களும், பிற பிரிவினர் 65 சதவீதம் மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஜேஇஇ அட்வான்ஸ் பொதுத் தேர்வு தரவரிசைப் பட்டியல் (CRL) அல்லது பிரிவு வாரியான தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். இதுமட்டுமல்லாது, கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய அல்லது சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஏதேனும் ஒரு பதக்கத்தையாவது வென்றிருக்க வேண்டும்.
மேலும், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 13 விளையாட்டுகளைக் கொண்ட பட்டியலில் விண்ணப்பதாரர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு, சர்வதேச மற்றும் தேசிய அளவில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில், தனி விளையாட்டு தரவரிசைப் பட்டியல் (SRL) தயாரிக்கப்படும். இந்த SRL பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கைக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை ஐஐடியில் உள்ள 15 பாடப் பிரிவுகளிலும் தலா 2 இடங்கள் என, 30 இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். சென்னை ஐஐடியில் பி.இ., பி.டெக். பட்டப் படிப்பிற்கான கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கப்படும்.
முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் குறைந்தளவில் மாணவர்கள் சேர்ந்தாலும், வரும் ஆண்டுகளில் அதிகளவில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று நம்புகிறோம். மேலும், சென்னை ஐஐடியில் செயல்படுத்தப்பட்டு வரும் விளையாட்டு ஆய்வு மையத்தின் மூலம், மாணவர்களின் திறன்களை வளர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அனைத்து போட்டிகளிலும் டெக்னாலஜி துணை இல்லாமல் உலக சாம்பியன் ஆக முடியாது என்ற நிலை தற்போது ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, செஸ் விளையாட்டில் இது நன்றாகத் தெரிகிறது. ஆகவே, விளையாட்டுத் துறைக்காக தனியாக வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோரமண்டல் போன்ற விதிகளை மதிக்காத நிறுவனங்களை இனி தமிழகத்தில் செயல்பட அனுமதிக்க முடியாது - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்