திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாற்றுச் சமூகத்தினர் தங்களைக் கோயிலுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என, கந்தசாமி என்ற நபர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி வருவாய்த் துறை கண்காணிப்பில், காவல்துறை பாதுகாப்பில் 10 குடும்பத்தினர் பொங்கல் வைத்து ஆலய நுழைவு மேற்கொண்டனர். இதனையடுத்து கோவிலுக்குள் நுழைந்த 10 குடும்பத்தினரையும் அதே சமூகத்தைச் சேர்ந்த 70 குடும்ப மக்கள் தங்கள் ஊருக்குள்ளேயே ஒதுக்கி வைத்திருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். மேலும், வேலை செய்யும் இடங்களில் சொல்லி தங்களை வேலை விட்டு நிறுத்தி விட்டதாகத் தெரிவிக்கும் இவர்கள், தங்களுக்கு உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து கந்தசாமி கூறுகையில், “எஸ்சி, எஸ்டி பிரிவினரைக் கோயிலுக்குள் அனுமதிக்காமல் இருந்தனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் ஒரு 7 குடும்பங்கள் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்தோம். பொங்கல் வைத்த நாளில் இருந்து ஓர் கட்டுப்பாடு என்னும் பெயரில் ஒரு கூட்டத்தைப் போட்டு, ஊர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி, பொங்கலில் கலந்து கொண்ட 9 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக முடிவெடுத்து உள்ளனர். பின்னர் இந்த 9 குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் வேலைசெய்யும் இடங்களின் ஓனர்களிடம் சொல்லி வேலையை விட்டும் நீக்கி விட்டனர்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து காலையா தேவி என்பவர் கூறுகையில், “யாரெல்லாம் கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட்டோமோ அவர்களை மட்டும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக ஆதிக்க பிரிவினர் அவர்கள் செய்யாமல், எங்கள் பிரிவைச் சேர்ந்தவர்களை வைத்தே கூட்டம் போட்டு பேசி முடிவெடுத்துள்ளனர். அதில் இருந்து யாரும் எங்களுடன் பேசுவதில்லை. கடைகளுக்குச் சென்று பொருட்கள் கேட்டாலும் தருவதில்லை. தீண்டாமை என்பது இன்னமும் இந்த ஊரில் உள்ளது. 18ஆம் நூற்றாண்டில் இதுபோல் செய்தார்கள் எனத் தெரியும், ஆனால் 21ஆம் நூற்றாண்டிலும் இதுபோல் தீண்டாமை உள்ளது மனவருத்தத்திற்கு உரியதாய் உள்ளது” எனத் தெரிவித்தார்.