திருநெல்வேலி: நெல்லை சி.என் கிராமத்தில் "நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்" என்ற தலைப்பின் கீழ் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய தரைவழி நெடுஞ்சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே சிங், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நைனார் நாகேந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் வி.கே சிங் கூறியதாவது, "அரசு செய்யும் நலத்திட்டங்களில் முழு பலன்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே மத்திய அரசின் நோக்கம். ஆனால் விளம்பரத்திற்காக மத்திய அரசு செயல்படுகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் குற்றம் சாட்டுவதை முற்றிலும் மறுக்கிறேன்.
மத்திய அரசு களத்தில் இறங்கி மக்களுக்கான தேவைகளை திட்டங்களாக உருவாக்கி கொண்டு சேர்த்து வருகிறது. வாகனத்தின் அனைத்து உதிரி பாகங்களும் ஒன்று சேர்ந்து பணி செய்தால் மட்டுமே வாகனம் சிறப்பாக ஓடும் என்பதைப் போல மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு சேர்க்க முடியும்.