சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் அளித்த புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலகலத்தை தூண்டுதல், பொது அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
எனவே, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஷோபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இணையமைச்சர் ஷோபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
அதில், குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய கருத்து எந்த உள்நோக்கத்துடனும், தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும், தனது கருத்து தமிழர்களை புண்படுத்தியதை புரிந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் மன்னிப்பு கோரியதாகவும், தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.