டெல்லி :உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கொள்கை நடைமுறைபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களைக் கடந்த மாதம் டிச.27 யுஜிசி வெளியிட்டது. இது தொடர்பான கருத்துகளை ஜன.28ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த தேதி இன்றுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப் பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பை பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி வெளியிட்டது.
இதனை தொடர்ந்து உயர்கல்வி நிறுவன வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை நேரடியாக ஒழிப்பதற்கான சதி என்று அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். குறிப்பாக இதனைக் கண்டித்து ஜேஎன்யூ மாணவர் சங்கம் போராட்டத்தை அறிவித்தது.
மேலும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவரப்படும் சதி தான் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் யுஜிசி அறிவிப்பிற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரக்கூடிய வேளையில் இந்த விவகாரம் பூககரமாகி கொண்டு இருந்தது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் "மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகும், எந்த இட ஒதுக்கீடு பதவியும் பாதிக்கப்படாது. 2019 விதிகளின்படியே அனைத்து காலியிடங்களும் நிச்சயம் நிரப்பப்படும்" என்று தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானிய குழு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றலாம் என வரைவு அறிக்கை வெளியிட்டி இருந்த நிலையி, அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததால் மீண்டும் ஏற்கனவே உள்ள முறைப்படி பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பல பிரச்சினைகளால் நலிவடைந்து வரும் பின்னலாடை தொழில் - திருப்பூரை காக்க நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு!