சென்னை: தமிழ்நாட்டின் துணை முதமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை பதவியேற்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் என்ட்ரி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு அரசியல் களத்திற்கு வந்தார். அதிமுகவையும், மத்தியில் உள்ள பாஜகவையும் கடுமையாக சாடி பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் மீது அரசியல் ரீதியான விமர்சனங்களும் எழத் தொடங்கின.
இதனை அடுத்து, தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சிக்காக பிரச்சாரம் செய்த உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வலியறுத்தினர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வகித்து வந்த இளைஞரணி பொறுப்பு, அமைச்சர் உதயநிதிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலையில் வழங்கப்பட்டது.
முதல் முறையாக உதயநிதி எம்எல்ஏ: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி போட்டியிட விரும்புவதாகவும், அவர் அரசியலில் களமிறங்க இதுவே சரியான நேரம் என திமுக நிர்வாகிகள் பலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சட்டமன்றத் தேர்தலில் உதயநிதிக்கு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி ஒதுக்கப்பட்டது. பின்னர் உதயநிதி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.