தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் உரிமைத் தொகை; 'விரைவில் குறைகள் நீங்கும்' - உதயநிதி ஸ்டாலின் சொன்ன தகவல்..!

குறைபாடுகள் சரி செய்யப்பட்டு அனைத்து தகுதியுள்ள மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2024, 1:12 PM IST

Updated : Nov 14, 2024, 5:13 PM IST

தூத்துக்குடி:தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று வருகை தந்தார். பின்னர், இன்று (நவ.14) திமுக நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துவிட்டு, ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இல்ல திருமண விழாவில் (சுயமரியாதை) உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர், உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், '' கழகத்தின் குடும்ப விழாவாக இந்த திருமண விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது... 'மோடி எங்கள் டாடி' என்று சொல்லக்கூடியவர்களை வீட்டுக்கு அனுப்பியவர்கள் இங்கு அமைச்சர்களாக உட்கார்ந்து இருக்கிறார்கள்'' என்றார்.

திருமண விழாவில் பேசும் உதயநிதி ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamilnadu)

சுயமரியாதை திருமணம்: தொடர்ந்து பேசிய உதயநிதி, '' 1967-இல் பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பின்பு பெரியார் அறிமுகப்படுத்தியதை சட்ட வழிகளில் கொண்டு வந்தார். அதன் பின்பு தான் சுயமரியாதை திருமணம் வந்தது. இதற்கு காரணம் பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் தான். திராவிடர் கழகம் மட்டுமில்லை என்றால், தமிழில் பெயர் வைப்பது இல்லாமல் இருந்திருக்கும். மக்கள் கோவில் கருவறை மற்றும் கோவிலினுள் செல்ல திராவிட முன்னேற்றக் கழகம் தான் காரணம்'' என கூறினார்.

இதையும் படிங்க:புதுக்கோட்டையில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் ரூ.18 லட்சம் முறைகேடு..அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

மேலும், '' மண்டப இருக்கையில் பெண்கள் அதிகமாக உட்கார்ந்திருக்கிறார்கள். ஆண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், முதலில் அவ்வாறு கிடையாது. பள்ளிக்கூடம், வெளியில் செல்வதற்கும் மேலாடை உடுத்துவது கிடையாது. ஆனால், இந்த உரிமையை கொண்டு வந்தவர் தான் பெரியார். இதற்கு சம்பிரதாயம், சடங்கு என்று எல்லாம் பெயர் வைத்தார்கள். இந்த பிற்போக்குத்தனத்தை வேரோடு பிடுங்கி எறிந்தது திமுக தான்.

மகளிர் உரிமைத் தொகை: இந்தியாவில் முதன்முறையாக மகளிருக்கு குடும்ப சொத்தில் சம உரிமை என்று கொண்டு வந்தவர் கலைஞர். இந்தியாவில் முதல்முறையாக, முதலமைச்சர் காலை உணவு திட்டம் தொடங்கி 20 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் முதலமைச்சர் செயல் படுத்திக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல, மகளிருக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கின்றார். அதில் சில குறைபாடுகள் இருக்கிறது.. விரைவில் அது சரி செய்யப்பட்டு அனைத்து தகுதி உள்ள மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கொடுக்கப்பட உள்ளது. இதனை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

சுயமரியாதை திருமண தம்பதிக்கு பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அழகான தமிழ் பெயரில் பெயர் வைக்க வேண்டும்'' என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இந்த திருமண நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

Last Updated : Nov 14, 2024, 5:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details