சென்னை:தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று (நவ.12) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
தொடர்ந்து மழை முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அதிகாரிகள் துணை முதலமைச்சரிடம் விளக்கினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "அடுத்த 4 நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சராசரியாக சென்னையில் 3.60 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தென் சென்னையில் சராசரியாக 5.5 செ.மீ அதிகபட்சமாகப் பெருங்குடியில் 7.35 செ.மீ மழையும், செங்கல்பட்டில் 1.0 செ.மீ மழையும், திருவள்ளூரில் 0.6 செ.மீ மழையும், காஞ்சிபுரத்தில் 0.5 செ.மீ மற்றும் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை ஏற்பாடு மற்றும் தற்போது நிலை குறித்து கேட்டறிந்தோம். 1494 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. 158 அதி விரைவு மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. கண்காணிப்பு அதிகாரிகள் அறிவுறுத்தலின்படியும், அக்டோபர் மாதம் பெய்த மழையின் கருத்தில் கொண்டும் கூடுதல் மோட்டார்களை நிறுவியுள்ளோம். 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. 120 உணவு தயாரிக்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளது. அக்டோபர் மாதத்தில் 95 ஆக இருந்தது தற்போது அதன் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறோம்.