சென்னை: மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்கவும், சத்தான ஆரோக்கியான உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவுத் திருவிழாவை நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) தொடங்கியது.
இந்த விழாவைத் தொடங்கி வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்த பிரத்யேக உணவுகளை சுவைத்து மகிழ்ந்தார். விழா ஏற்பாட்டாளர்கள், அந்தந்த மாவட்ட உணவுகளின் சிறப்புகள் குறித்து துணை முதலமைச்சருக்கு விளக்கினர்.
பல்வகை உணவுகள்
உணவுத் திருவிழாவில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த சுவையும், தரமும் நிறைந்த கோவை கொங்கு மட்டன் பிரியாணி, கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில், கரூர் தோல் ரொட்டி – மட்டன் கிரேவி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், தருமபுரி ரவா கஜூர், நீலகிரி ராகி களி – அவரை குழம்பு, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், காஞ்சிபுரம் கோவில் இட்லி, சிவகங்கை மட்டன் உப்புக்கறி, புதுக்கோட்டை சுக்குமல்லி காபி போன்ற பல ரகங்கள் சுவைப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது.
மேலும், ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, வேலூர் ராகி கொழுக்கட்டை, மதுரை கறி தோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட், தஞ்சாவூர் பருப்பு உருண்டை குழம்பு, திருச்சி நவதானிய புட்டு, மயிலாடுதுறை இறால் வடை, நாகப்பட்டிணம் மசாலா பணியாரம், கன்னியாகுமரி பழம்பூரி, சென்னை தயிர் பூரி ஆகியனவும் இடம்பெற்றன.