உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் ஈரோடு:நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனுக்கு ஆதரவாக கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "கடந்த 20 நாட்களில் சுமார் 36 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளேன். தற்போது, 40க்கு 40 என ஆயிரம் சதவீதம் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பது உறுதி. ஆனால் அதில் திருப்பூர் தொகுதி எத்தனையாவது இடம் என்றுதான் தெரியவில்லை. இந்தியாவை அடுத்து யார் ஆள வேண்டும்? என்று இருப்பதால் மோடியை பேக் செய்ய திமுக கூட்டணி வேட்பாளர் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களுக்கு கொஞ்சம் கூட பிரதமர் மரியாதை தரவில்லை. கல்வி, நிதி, மொழி என அனைத்து உரிமைகளும் பறித்துள்ளார். அதனால் மோடிக்கு ஓட்டு மூலம் வேட்டு வைத்து விட்டு தான் அடுத்த வேலை நாம் செய்ய வேண்டும். கடந்த 2014ஆம் ஆண்டு சிலிண்டர் விலை ரூ.450 இருந்தது. தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழக மக்கள் மோடியிடம் ஏமாந்ததாகச் சரித்திரம் இல்லை. திமுக தலைவர் சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை குறைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.
துரோகம் செய்தவர் எடப்பாடி:திமுக தலைவர் ஸ்டாலின் யார் காலிலும் விழவில்லை, தவழ்ந்து போகவில்லை. அப்படி யார் போனார்?, உலக வரலாற்றில் வெட்கம் கெட்ட மான கெட்ட முதலமைச்சராகத் தான் எடப்பாடி பழனிசாமி வந்தார். சசிகலா காலை ஊர்ந்து சென்று பிடித்து வந்த நிலையில், தற்போது சசிகலா காலை வாரி விட்டார். சசிகலாவிற்குப் பச்சை துரோகம் செய்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. சசிகலா மட்டுமின்றி ஓட்டு மொத்த மக்களுக்கு துரோகம் செய்தார்.
தமிழ்நாட்டின் உரிமைகளை அடைமானம் வைத்தவர் எடப்பாடி. கரோனா காலத்தில் கரோனா வார்டுக்கு சென்று ஆய்வு செய்தவர் ஸ்டாலின், பால் லிட்டர் விலை குறைப்பு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, மகளிர் இலவச பேருந்து சேவை உள்ளிட்ட அனைத்து வாக்குறுதியும் திமுக தலைவர் ஸ்டாலின் நிறைவேற்றினார். ஈரோடு மாவட்டத்தில் 56ஆயிரம் மாணவர்கள் காலை உணவுத் திட்டம் மூலம் பயன்பெற்று வருகிறார்கள், 100 சதவீதம் தகுதி வாய்ந்த அனைத்து மகளிருக்கு இன்னும் சில மாதங்களில் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
"கெட் அவுட் மோடி": பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார். அவருக்கு நான் புதிதாக பெயர் வைத்துள்ளேன் 29 பைசா பிரதமர் என்று. இனி பாஜகவினர் ஓட்டு கேட்டு வந்தால் 29 பைசா பிரதமர் எப்படி இருக்கிறார் எனக் கேளுங்கள், அவர்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் மீது கோபம் இருப்பதால் குறைந்த அளவு நிதி வழங்குகிறது. கடந்த முறை நாம் "கோபேக்" மோடி என்று சொன்னோம், அதேபோல இந்த முறை "கெட் அவுட் மோடி" என்று சொல்ல வேண்டும்.
நிதியுரிமை கேட்க மத்திய அரசு மறுத்து விட்டது. அதனை முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கேட்டு பெறவில்லை. பாஜக திருவள்ளுவர் சிலைக்குக் காவி சாயம் பூசி விட்டது. மோடி தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே வருவார். கடந்த 2019ஆம் ஆண்டு மோடி வந்த போது, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று சொன்ன நிலையில், நான் சென்று பார்த்தேன். அது, நடிகர் வடிவேல் நகைச்சுவை பாணியில், கதவைத் திறந்தது வெட்டவெளியாக இருப்பது போல, மருத்துவமனை அங்குக் காணவில்லை என்ற நிலை தான் உள்ளது. ஆகையால் கலைஞர் பிறந்த நாளில் சிறந்த பரிசாக 40க்கு 40 என்ற வெற்றியைப் பெற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "அன்புமணியின் எம்.பி பதவி அதிமுக போட்ட பிச்சை" - அன்புமணியின் விமர்சனத்திற்கு எடப்பாடி பதிலடி! - Lok Sabha Election 2024