திண்டுக்கல்: திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில், திமுக கூட்டணி தலைமையிலான இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கோரி, நத்தம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து பேசும்போது, "இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், இங்கு போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தம், தங்கள் மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்வதற்காக இன்று வரை போராடிக் கொண்டிருக்கிறோம். இதுவரை நீட் தேர்வு காரணமாக உயிரிழந்தவர்களான மாணவி அனிதா முதல் அனைவரின் வீடுகளுக்கும் ஆறுதல் கூறி வருகிறேன். இது குறித்து ஒன்றிய பாஜக அரசு நீட் விலக்கு மசோதாவிற்கு மௌனம் காத்து வருகிறது. ஒன்றிய அரசுக்கு நாம் 6.5 லட்சம் கோடி கொடுத்தால், அது வெறும் 1.5 லட்சம் கோடியை மட்டுமே நமக்கு தருகிறது.
அதாவது, ஒரு ரூபாய் மாநில அரசிடம் வாங்கிக் கொண்டு, நமக்கு வெறும் 28 பைசா மட்டுமே கொடுக்கிறது, மோடி அரசு. எனவே, பிரதமர் மோடி இனிமேல் 28 பைசா என பெயர் கூறி அழைக்க வேண்டும். கோவிட் பாதிப்பு சமயத்தில், பிரதமர் மோடி விளக்கேற்று, தட்டைத் தூக்கு கோவிட் ஓடிவிடும் என்று சொல்லி ஆட்சி செய்தார்.
ஆனால், நமது முதலமைச்சர், அதற்கான தீர்வு தடுப்பூசி தான் என்று கூறி, மக்களையும் போட வைத்து தானும் போட்டுக் கொண்டார். அது மட்டுமல்லாமல், கோவிட் வார்டுக்குள் சென்று பாதித்தவர்களுக்கு ஆறுதல் கூறி வந்தார். இந்தியாவிலேயே தைரியமாகவும், முன்னுதாரணமாகவும் விளங்கியவர் நமது முதலமைச்சர். மேலும், கோவிட் பாதிப்பிலிருந்து வெளியே வருவதற்கு வழிகாட்டியாக விளங்கியவர்கள் தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் தான்.
2019-இல் ஒன்றிய அரசு சிஏஏ சட்டம் கொண்டு வந்தது. அதிமுக ஆதரித்து வெற்றி பெற வைத்தது. ஆனால், நமது முதலமைச்சர் அன்றும் எதிர்த்தார், இன்றும் தமிழ்நாட்டுக்குள் சி.ஏ.ஏ சட்டத்தை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார். சி.ஏ.ஏ சட்டத்திற்காக அதை கிழித்து எறிந்து எதிர்ப்பு தெரிவித்து, எனது அரசியல் வாழ்வில் நாள் முதன்முதலாக கைது செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதும் சிறை வைக்கப்பட்டேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிக்கு வந்தவுடன், தேர்தல் வாக்குறுதிகளில் முதல் கையெழுத்து மகளிருக்கு அரசு டவுன் பஸ்சில் இலவச பயணம் செய்யலாம் என்ற கையெழுத்து. இதன் மூலம், கடந்த 3 வருடத்தில் 455 தடவை பயணம் செய்திருக்கிறீர்கள். இதனால் மாதம் ரூ.800 முதல் 900 வரை சேமிப்பு செய்திருக்கிறீர்கள். இந்த திட்டத்தை மகளிர் நல்ல முறையில் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்றால், திட்டம் வெற்றி பெற்றுள்ளது.