சென்னை: 2023-2024ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் (12th exam result) கடந்த மே.6 ஆம் தேதி வெளியாகின. தமிழ்நாட்டில் மொத்தமாகத் தேர்ச்சி சதவிகிதம் 94.56% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், திருப்பூர் மாவட்டம் அதிகபட்சமாக 97.45% தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஒரே திருநங்கை மாணவியான நிவேதா 283 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும், மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்பதே தன் இலக்கு என்று கூறினார். இந்நிலையில் மாணவி நிவேதாவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திற்கு அழைத்துப் பாராட்டினார்.
இதனைத்தொடர்ந்து தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "திருநங்கை என்ற சொல்லுக்கு அரசு ரீதியிலான அங்கீகாரம் அளித்ததுடன் அவர்களுக்கான நலவாரியமும் அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அத்தகைய பெருமைக்குரிய கலைஞரின் நூற்றாண்டில் பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்று அவரின் கனவுகளைச் சாத்தியமாக்கும் சகோதரி நிவேதாவுக்கு வாழ்த்துகள்.
வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வாசல்களைத் திறப்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நம் திராவிட மாடல். அரசின் லட்சியம் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு நிவேதாவின் வெற்றி. சகோதரி நிவேதா இன்னும் பல உயரங்களை எட்டி, திருநர் சமூகத்தின் மேம்பாட்டுக்கு உழைக்க வாழ்த்துகிறேன்" என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சென்னையில் கொட்டும் கோடை மழை! பொதுமக்கள் மகிழ்ச்சி - Chennai Rain Update