சென்னை: தமிழ்நாட்டில் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் அதே வகையிலான முக்கியத்துவம் தான், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் வழங்கப்படுகிறது எனவும், வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில், மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் அரசு வேலை வழங்கப்பட்டு வருகிறது எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில், 23வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் (23rd National Para Athletics Championship) நேற்று (பிப்.18) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டுப் போட்டியினை தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை தொடங்கி வைத்தார்.
இந்த தொடரில் 30 மாநிலங்களைச் சார்ந்த 1,476 வீரர், வீராங்கனை பங்கேற்கின்றனர். பிப்.20 ஆம் வரை நடைபெறும் இந்த தொடரில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் நடைபெறும் பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் அதிகளவிலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி முருகேசன், விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேக்நாத் ரெட்டி, இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தேவேந்திரியா ஜஹாரியா, பாரா தடகள வீராங்கனை பத்மஶ்ரீ தீபா மாளிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.