சென்னை: சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2023 - 2024ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "தந்தை பெரியார் ஒரு பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு காரில் போய்க்கொண்டிருந்த போது, சாலையில் பள்ளிச் சிறுடை அணிந்து கொண்டு பெண்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பெரியாருக்கு 94 வயது, அவருடைய வாகனத்தில் உட்கார்ந்து கொண்டு அந்த காட்சியை பார்த்து, ஒரு சின்ன குழந்தையை போல உற்சாகமாக பெண் குழந்தைகளை பார்த்து கைதட்டி ரசித்து மகிழ்ந்தார். முன்னாள் முதமைச்சர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த போது, மாணவர்கள் பள்ளிக்கு நடந்து செல்லக்கூடாது என்பதற்காக இலவச பேருந்து அட்டையை வழங்கினார்.
தந்தை பெரியாருக்கும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி தான் இன்று இங்கு வந்துள்ள மாணவர் செல்வங்களை பார்க்கும் போது ஏற்படுகிறது. இந்த மகிழ்ச்சி அனைத்து நாளிலும் தொடர வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் கருணாநிதியின் லட்சியம்.
முதலமைச்சர் அரசு பள்ளி, தனியார் பள்ளி என்று பிரித்துப் பார்ப்பது கிடையாது. தனியார் பள்ளிகளில் இருக்கும் அத்தனை வசதிகளும் அரசு பள்ளிகளுக்கும் வரவேண்டும் என்பதற்காக தான் ஒவ்வொரு திட்டத்தையும் முதலமைச்சர் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்.
அதேபோல், விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இந்த அரசு அனைத்து வகைகளிலும் உதவ தயாராக இருக்கிறது. விளையாட்டுத்துறையில் சாதிக்கும் திறமையாளர்களுக்கு உதவிட இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாடு அரசு தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டு இருக்கிறது.
இந்த அறக்கட்டளை மூலம் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு, ஒரு வருடத்தில் ரூ.10 கோடி அளவில் உயரிய ஊக்கத் தொகை நிதி உதவி வழங்கப்படுகிறது. சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் சாதிக்கின்ற மாணவர்களுக்கு உயரிய உக்கத்தொகை வழங்கி தமிழ்நாடு அரசு கவுரப்படுத்தி வருகிறது" எனக் கூறினார்.