சென்னை: ராயப்பேட்டை வி.எம் தெருவில் பிரசித்தி பெற்ற முட்டி கன்னியம் கோவில் உள்ளது. நேற்று கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த ஆலயத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இதனால் கோவில் திருவிழாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு எந்த அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து மாலை கோவில் திருவிழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது திருவிழாவில் கலந்து கொண்ட வாலிபர் சிலர், மதுபோதையில் நடனமாடி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் கௌசல்யா (26) மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்களை கலைந்து செல்லும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் பெண் காவலரிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அதில் ஒருவர் கையில் வைத்திருந்த பிளேடால் காவலர் கௌசல்யாவின் வலது கையில் அறுத்து விட்டு தப்பிச் சென்றார்.