சென்னை: சென்னை மேற்கு அண்ணாசாலை பகுதியில் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் நடத்தி வருபவர் இந்திரா காந்தி (54). அந்த பயிற்சி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கவிப்பிரியா (26). இவர்கள் மத்திய அரசு பணியில் சேர்த்து விடுவதாக கூறி பலரிடம் பணம் வசூல் செய்துள்ளனர்.
அதில், கோவையை சேர்ந்தவர்களிடமும் பணம் வசூலித்துள்ளனர். 18 பேரிடம் 2 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. பணத்தை கொடுத்த நிலையில் வேலை வாங்கி கொடுக்காமல் இருந்துள்ளனர். இதுகுறித்து கேட்டால் முறையான விளக்கம் அளிக்காமல் இருந்துள்ளனர். பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த மோசடி குறித்து கோவையை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர மத்திய குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சென்னை சென்று இந்திராகாந்தியையும், கவிப்பிரியாவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.