தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி சட்டப் பல்கலையில் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்த விவகாரம்; 2 மாணவர்களுக்கு செமஸ்டர் எழுத தடை! - today news in tamil

Tamil Nadu National Law University: திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில், சக மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து குடிக்க வைத்த விவகாரம் தொடர்பாக 2 மாணவர்கள் நடப்பாண்டில் தேர்வு எழுதவும், படிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

trichy National Law University
திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 11:42 AM IST

திருச்சி:திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, ராம்ஜிநகர் பகுதியில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் திருச்சி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி, வெளி மாவட்ட மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் சட்டம் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவரை சக மாணவர்கள் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து ஏமாற்றி குடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரத்தில் இரண்டு மாணவர்களை ஓராண்டுக்கு தடை விதித்து பல்கலைக்கழக ராகிங் குழு பரிந்துரை செய்துள்ளது.

அதாவது, கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் ஒன்றில், பிஏஎல் எல்பி இறுதியாண்டு படிக்கும் 2 மாணவர்கள், தங்களுடன் படிக்கும் சக மாணவர்களில் ஒருவருக்கு, குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து ஏமாற்றி குடிக்க வைத்துள்ளனர். அதில் பாதிக்கப்பட்ட மாணவர், சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் நாகராஜ், பதிவாளர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரிடம் ஜனவரி 10ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பெயரில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த உதவிப் பேராசிரியர் தலைமையிலான விசாரணைக் குழு, துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த விசாரணையில், ராகிங் செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், அதில் சம்பந்தப்பட்ட 2 மாணவர்களின் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க இந்த குழு பரிந்துரைத்துள்ளது.

அதனால் பதிவாளர் பாலகிருஷ்ணன், ராம்ஜி நகர் போலீசில் சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர் மீது புகார் அளித்துள்ளார். அதனையடுத்து, ராம்ஜி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த இரண்டு மாணவர்களும் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், துணைவேந்தர் தலைமையிலான 9 பேர் கொண்ட ராக்கிங் தடுப்பு குழுக் கூட்டம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. அதில் ராகிங்கில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களும், நடப்பு கல்வி ஆண்டில் (2023 - 2024) 10வது பருவத் தேர்வு எழுதவும் படிக்கவும் தடை விதித்துள்ளது. அதற்கு பதிலாக பத்தாவது பருவத்தை அடுத்த ஆண்டு (2024 - 2025) படிக்கலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது. மேலும், இந்த பரிந்துரையை பல்கலை நிர்வாகக் குழு அடுத்த வாரம் இறுதி செய்யும் எனவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்புடைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details