தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை அரசுப் பள்ளியில் இரு சமூக மாணவர்கள் இடையே மோதல்; படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதி - Communal clash between students - COMMUNAL CLASH BETWEEN STUDENTS

Communal clash between students: திருநெல்வேலி அருகே அரசு பள்ளியில் இரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில் நடந்த மோதலில், இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்து மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவமனை
திருநெல்வேலி அரசு மருத்துவமனை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 10:51 PM IST

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு பள்ளி மாணவன் மற்றும் அவனது சகோதரி அரிவாளால் வெட்டப்பட்டனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது அந்த மாணவன் 12 ஆம் வகுப்பு தேர்சி பெற்று கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் பேட்டி (vVideo Credits - ETV Bharat Tamilnadu)

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதி அடுத்த மருதகுளம் கிராமத்தில் உள்ள ரோஸ்லின் செல்லையா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியில் பொன்னாக்குடி, மாயனேரி, மருதகுளம் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) மாலை இடைவேளையின்போது பொன்னாக்குடி மற்றும் மாயனேரி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் மோதிக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரியவருகிறது.

இந்த மோதலில், 12ஆம் வகுப்பு மாணவனுக்கு கையில் படுகாயமும், மற்றொரு மாணவனுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனை அடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மோதலில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கலைந்து போக செய்து, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை அலுவலகம் அழைத்து சென்று விசாரித்தனர்.

மேலும், படுகாயம் அடைந்த மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட பொன்னாகுடியை சேர்ந்த மாணவர்கள் கூறுகையில், "மாயனேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொன்னாகுடியை சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்டனர்.

ஜாதி பெயரைச் சொல்லி தாக்குதல்:அப்போது, நாங்களும் பொன்னாகுடியைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, ஜாதி பெயரைச் சொல்லி எங்களை தாக்கினர். எங்கள் ஊரை வைத்து ஜாதி அறிந்து கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இப்பள்ளியில், இரு சமூக மாணவர்கள் மத்தியில் அடிக்கடி மோதல் நடைபெறுகிறது" எனத் தெரிவித்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் கூறும்போது, "ரோஸ்லின் செல்லையா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே, இருவேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது. தற்போது பொன்னாகுடி மற்றும் மாயனேரி கிராம மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலுக்கு தொடர்பே இல்லாத மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் பொன்னாகுடியைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்த பிறகுதான் இவர்களை தாக்கியுள்ளனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஊரணி நிலத்தை ஆக்கிரமிக்கும் ஸ்பிக் நிர்வாகம்... நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் ஊர் மக்கள் மனு

ABOUT THE AUTHOR

...view details