திருநெல்வேலி:காணும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி குடும்பத்துடன் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது ஆற்றில் மூழ்கிய இரு சிறுமிகளுள் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் நேற்று காலை இரண்டாவது நாள் மீட்புப் பணியின் போது மாயமான மற்றொரு சிறுமியையும் தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.
காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் நீர்நிலைகளில் நீராடி குடும்பத்தோடு பொழுது போக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் காணும் பொங்கலன்று(ஜன.16) தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாக அர்ஜுனன் மற்றும் ஐயப்பன் குடும்பத்தினர் சுமார் 15க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் முக்கூடல் அருகே உள்ள வேளார்குளம் பகுதியில் உள்ள நண்பர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
பின் ஜன.17ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாக அர்ஜுனன் மற்றும் ஐயப்பன் குடும்பத்தினர் பொங்கல் சிறப்பாக முக்கூடலில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு குடும்பத்துடன் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது நாக அர்ஜுனனின் 13 வயது மகள் மற்றும் ஐயப்பனின் 16 வயது மகள் உள்பட 5 பேர் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த 5 பேரையும் காற்றாற்று வெள்ளம் திடீரென இழுத்துச் சென்ற நிலையில், சிறுமிகள் கூச்சலிட அவற்றை பார்த்துப் பதற்றமடைந்த பெற்றோர்கள் நீச்சல் அடித்துச் சென்று 3 பேரை பத்திரமாக உயிருடன் மீட்டனர். அதில், 13 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுமி என இருவரும் மாயமானதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி தீயணைப்புத் துறையினர் சுமார் 15 பேர், முக்கூடல் பகுதி தன்னார்வலர்களுடன் இணைந்து இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:சேலம் ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை...பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள்!
முதற்கட்டமாக 13 வயதுடைய சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், வெளிச்சம் இல்லாத காரணத்தால் 2-வது நாளாக மீட்புப் பணியை நேற்று காலை 6 மணியிலிருந்து தொடங்கினர். ரப்பர் படகு உதவியுடன் நீண்ட நேரமாக தேடுதல் பணியானது நடந்த நிலையில், 16 வயதுடைய மற்றொரு சிறுமியையும் தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.
தற்போது, முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வீரவநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.