ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்த புஞ்சை துறையம்பாளையம், ஓட்டுக்கடைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பகவதியண்ணன் (67). இவர் ஆடு மாடுகள் வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை தனது வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டுக்கிடாய் சத்தமிட்டு உள்ளது.
இதனையடுத்து பகவதியண்ணன் வெளியே வந்து பார்த்த போது, அடையாளம் தெரியாத இருவர் வீட்டிற்கு வெளியே கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை அவிழ்த்துக் கொண்டிருந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பகவதியண்ணன் சத்தமிட்ட உடனே ஆட்டை இருவரும் மோட்டார் சைக்கிளில் வைத்து தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர்.
பகவதியண்ணன் சத்தமிட்டதில், பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் ஆட்டை திருடிச் சென்றவர்களை துரத்திச் சென்றுள்ளனர். இந்நிலையில், இருவரையும் அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் வரப்பள்ளம் என்ற இடத்தில் மடக்கி பிடித்துள்ளனர். இதுகுறித்து பங்களாப்புதூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆடு திருடிய இருவரையும் பங்களாப்புதூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து பகவதியண்ணன் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்தினர்.
இதில் ஆடு திருடியது கணக்கம்பாளையம் வேலுமணி (27) என்பதும், அதே பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (30) என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ஆட்டை பறிமுதல் செய்த பங்களாப்புதூர் காவல்துறையினர், வேலுமணி மற்றும் கோபிநாத் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இதையும் படிங்க:போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயற்சி.. சென்னையில் பிடிபட்ட வங்கதேச இளைஞர்! - FAKE PASSPORT ISSUE