பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் மகன், கரிகாலன்(45). விவசாயியான இவர், ஆலம்பாடி கிராமத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனிடையே சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜோசியரான சோலைராஜா (73) என்ற முதியவர், ஆலம்பாடி கிராமத்திலிருந்து சொந்த ஊர் செல்வதற்காக கரிகாலன் வந்த இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்டு பின்னால் அமர்ந்து, பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர்.
இந்த நிலையில், பெரம்பலூரில் இருந்து மேலப்புலியூர் நோக்கி அதிவேகமாகச் சென்ற மினிபஸ் கரிகாலனும், சோலைராஜாவும் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கரிகாலனும், சோலைராஜாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்த கரிகாலனின் உறவினர்கள் உள்ளிட்ட ஆலம்பாடி பகுதி பொதுமக்கள், சம்பவ இடத்தில் திரண்டு விபத்திற்கு காரணமான மினிபஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து மினிபஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.