சேலம்: கெஜல்நாயக்கன்பட்டியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்தில் இரண்டு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் வரும் மார்.19 ம் தேதி நடைபெற உள்ள பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடக்க உள்ள மைதானத்தைப் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் ராமலிங்கம், மாவட்டத் தலைவர் சுரேஷ் பாபு, கிழக்கு மாவட்டத் தலைவர் சண்முகநாதன், சேலம் மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் நேற்று (மார்.12) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இது குறித்து, கே.பி.ராமலிங்கம் கூறுகையில், “சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் மார்.15 ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தற்போது இந்த கூட்டம் மார்ச் 19ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட மக்கள் மோடியை வரவேற்கத் தயாராகி விட்டனர்.
மற்ற கட்சிகளைப் போல் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே மாநாட்டு மேடை அமைப்பது, ஆட்களை அழைத்துச் செல்வது போன்ற ஏற்பாடுகள் எங்களுக்குத் தேவையில்லை. மூன்று நாட்களுக்குள் கூட்டம் நடத்த தயாராக இருந்த எங்களுக்கு, மேலும் மூன்று நாட்கள் கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது. மைதானத்திலேயே ஹெலிபேட் அமைக்கப்பட உள்ளது.