சென்னை: பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மே 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் செயல்படவில்லை என்றும், சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல் தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு, எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார்? என்னவெல்லாம் செய்ய மாட்டார்? என உத்தரவாதம் அளிக்க நேற்று (மே 23) உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில், சவுக்கு சங்கர் மீது சட்டத்திற்கு உட்பட்டு குண்டர் சட்டம் போடப்பட்டது. அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4 மாதத்தில் சட்டத்திற்கு உட்பட்டு நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், குண்டர் சட்டம் போடப்படுவதற்கு முன், அதாவது மே 12ஆம் தேதிக்கு முன் எத்தனை வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத் தரப்பில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் குண்டர் சட்டம் போடப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மே 11 வரை 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், ஒரு வழக்கில் மட்டுமே கைது காட்டப்பட்டுள்ளது. மற்ற 4 வழக்குகளில் ஏன் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினர். மேலும், சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தை சென்னை காவல்துறை ஆணையர் உரிய விசாரணைக்குப் பின் பதிவு செய்தாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.