சென்னை:கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 8 ஆவது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (33). இவர் நேற்று மாலை தன்னுடைய மகன் புகழ்வேலனை தன்னுடைய மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் அமர வைத்து வியாசர்பாடி மேம்பாலத்தில் சென்ற போது அங்கு காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் சிறுவனின் கழுத்தில் பட்டு அறுத்ததில் சிறுவனக்கு ரத்தம் வெளியேறியது.
உடனடியாக சிறுவனை தூக்கி கொண்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனுக்கு கழுத்தில் 7 தையல் போடப்பட்டது. தகவலறிந்து உடனடியாக வியாசர்பாடி ஆய்வாளர் அம்பேத்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு மாஞ்சா நூலில் காத்தாடி விட்டவர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை பாலமுருகன், நான் என் மகனுடன் எம்ஆர் நகரில் இருந்து வியாசர்பாடியை நோக்கி சென்று கொண்டிருந்தேன். அப்போது வியாசர்பாடி பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த பகுதியில் பறந்து கொண்டிருந்த காத்தாடியின் மாஞ்சா நூல் முன்னாள் அமர்ந்து கொண்டிருந்த மகனின் கழுத்தை கீறியது. சுதாரித்துக்கொண்டு பிரேக் பிடிப்பதற்குள் நூல் மகனின் கழுத்தை ஆழமாக அறுத்துவிட்டது. மருத்துவமனையில் அவனுக்கு ஏழு தையல் போடப்பட்டுள்ளது. தற்போது நலமாக உள்ளான். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பாலமுருகன் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு!