கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த கோவில்பாளையத்தில் ஹெல்பிங் ஹேண்ட்ஸ் என்ற பெயரில் அரசு அனுமதி பெற்ற போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இதை கள்ளிப்பாளையத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் நடத்தி வருகிறார். இந்த மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 20 வயதான கிஷோர் என்ற இளைஞர் மரணமடைந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக ஈடிவி பாரத்துக்கு போலீசார் அளித்த தகவலின்படி, வாயில் துணியால் அடைத்து டேப் ஒட்டியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கிஷோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த கிஷோரின் தந்தை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஆவார். கோவை தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வந்த கிஷோர் கஞ்சா போதைக்கு அடிமையானதால் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.
சிகிச்சை பெற விருப்பமில்லாத கிஷோர், வீட்டிற்கு செல்வதாகக் கூறி அடம்பிடித்து தொடர்ந்து கூச்சலிட்டு வந்துள்ளார். இதனால் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்த ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (29.03.2024) இரவு கிஷோரின் கை கால்களைக் கட்டி அவரின் வாயில் துணி வைத்து அடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.