சென்னை:சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் மசாஜ் சென்டர் ஒன்று உள்ளது. இந்த சென்டருக்கு கொம்பையா (37) என்பவர் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்குச் சென்றுள்ளார். பின்னர், மசாஜ் சென்டரில் என்னென்ன சேவைகள் உள்ளது என்று கேட்டுவிட்டு, தனது நண்பரை அழைத்து வருவதாக சொல்லிச் சென்றவர், மீண்டும் 8 மணிக்கு தனது நண்பர் கிங் ஜோ என்பவர் உடன் வந்துள்ளார்.
இதனையடுத்து, மசாஜ் சென்டர் ஊழியர்களிடம் பேசிக்கொண்டே திடீரென்று மேலாளர் அல்பாய்ஸ் கன்னத்தில் அடித்து விட்டு, கல்லாப் பெட்டியில் இருந்த பணத்தை அள்ளிக் கொண்டு ஓடியுள்ளார். இதை பார்த்த மசாஜ் சென்டர் ஊழியர்கள் கொம்பையா பாண்டியனை மடக்கிப் பிடித்துள்ளனர். ஆனால், அவர் உடன் வந்தவர் தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து சம்பவம் குறித்து வேளச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பேரில், சம்பவஇடத்திற்கு வந்த போலீசார் கொம்பைய்யா பாண்டினயனை கைது செய்துள்ளனர். பின்னர், அவரிடமிருந்து கள்ளாப்பெட்டியில் இருந்து திருடிய ரூபாய் 5 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர்ந்து, அவரிடம் காவல் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், இவர் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, விஜயநாராயணம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் என்பதும். கடந்த 2013 முதல் தொடர் குற்ற வழக்கில் ஈடுபட்டு வருவதும், இவர் மீது மத்திய குற்றப்பிரிவில் மூன்று வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், சென்னையில் கிண்டி, அமைந்தகரை, அண்ணாநகர், ராயலா நகர், விருகம்பாக்கம், ராமாபுரம் ஆகிய காவல் நிலையங்களில் என மொத்தம் 9 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், இவர் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்து, இங்கே கொள்ளை அடிக்க வந்ததும் தெரிய வந்துள்ளது.
அதேநேரம், தப்பி ஓடிய கிங் ஜோ மொபைல் போனை எடுத்துக் கொண்டு ஓடிய நிலையில், அவர் திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் தங்கி இருப்பதைக் கண்டுபிடித்த தனிப்படை போலீசார், அவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:போனில் பேச்சு.. விருந்துக்கு அழைப்பு.. ரூ.50 லட்சம் பறிமுதல் விவகாரத்தில் பெணணிடம் விசாரணை! - Cell Phone Shop Owner Kidnapped