தமிழ்நாடு

tamil nadu

மீனவர்களுக்கென ஸ்பெஷலாக 23 புதிய அறிவிப்புகள்- சட்டபேரவையை கதி கலக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்! - TN Assembly 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 10:52 PM IST

TN Assembly: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மீனவர்களுக்கான 23 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அனிதா ராதாகிருஷ்ணன் புகைப்படம்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் (Credits - Anitha Radhakrishnan X Page)

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதமும், கேள்வி நேரமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூன் 22) மீன்வளம் மற்றும் மீனவர் நலன் துறை சார்பில் புதிய அறிவிப்புகள் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய அறிவிப்புகள் :

  • ரூ.12 கோடியில் சென்னை மாவட்டம், பாரதியார் நகரில் புதிய மீன் இறங்குதளம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் மீன் இறங்குதள மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும்.
  • விழுப்புரம் மாவட்டம், சின்னமுதலியார் சாவடியில் ஒருங்கிணைந்த மீன் இறங்கு தளம் ரூ.12 கோடியே 30 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
  • கடலூர் மாவட்டம், சாமியார் பேட்டை மீன் இறங்கு தளத்தில், தூண்டில் வளைவுடன் கூடுதல் வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாருதல் ஆகிய பணிகள் ரூ.30 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
  • இராமநாதபுரம் மாவட்டம், சின்ன ஏர்வாடி மீனவ கிராமத்தில் ரூ.25 கோடி செலவில் தூண்டில் வளைவு மற்றும் வலைபின்னும் கூடம் அமைக்கப்படும்.
  • தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 11 மீனவ கிராமங்களில் வடிகால் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் ரூ. 8 கோடியே 50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
  • கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவ மகளிர் மாற்று வாழ்வாதார தொழிலாக கடற்பாசி வளர்ப்பினை மேற்கொள்ள ரூ.39.88 லட்சத்தில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • தூத்துக்குடி மாவட்டம், விவேகானந்தர் நகரில் மீன் இறங்குதளம் அமைத்தல் மற்றும் பெரியதாழை மீன் இறங்குதளத்தில் தூண்டில் வளைவு நீட்டித்தல் ஆகிய பணிகள் மொத்தம் ரூ. 38 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
  • தஞ்சாவூர் மாவட்டம், ஏரிப்புறக்கரை கிராமத்தில் மீன் இறங்கு தளம் அமைத்தல் மற்றும் கீழத்தோட்டம் மீனவ கிராமத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் மொத்தம் ரூ.32 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
  • மயிலாடுதுறை மாவட்டம், கீழமூவர்கரை மீனவ கிராமத்தில் கரையோர உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் வசதிகள் மொத்தம் ரூ.15 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
  • தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் மீனவ கிராமத்தில் படகு அணையும் தளம் அமைத்தல் மற்றும் புன்னக்காயலில் தூண்டில் வளைவுடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் மொத்தம் ரூ.37 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
  • மீன்களைத் தரமாகவும், சுகாதாரமான முறையிலும் வேறு இடங்களுக்கு எடுத்துச்செல்ல ஏதுவாக குளிர்காப்பிடப்பட்ட வாகனங்கள் வழங்கும் திட்டம் ரூ.14 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
  • ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு ரூ.2 கோடி மதிப்பில் 200 செயற்கைக்கோள் தொலைப்பேசிகள் வாங்கிட மானியம் வழங்கப்படும்.
  • கன்னியாகுமரி மாவட்டம், பெரியநாயகி தெரு மற்றும் பள்ளம்துறை மீன் இறங்கு தளங்களில் தூண்டில் வளைவு நீட்டிப்பு பணிகள் ரூ.52 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
  • மயிலாடுதுறை மாவட்டம், சந்திரபாடி மீன் இறங்குதளத்தில் தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் கூடுதல் வசதிகள் ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் ரூ.32 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
  • செங்கல்பட்டு மாவட்டம், கானத்தூர் ரெட்டி குப்பத்தில் ரூ.19 கோடி செலவில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்கு தளம் அமைக்கப்படும்.
  • தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் மீன் இறங்குதளத்தினை, மீன்பிடித் துறைமுகமாக மேம்படுத்திட ஆய்வுப் பணிகள் ரூ. 1 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடி உபகரணங்கள் வாங்கிட ரூ.1 கோடி மானியமாக வழங்கப்படும்.
  • கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியினை அதிகரித்திட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் ரூ. 75 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.
  • கைத்தூண்டில் மூலம் பிடிக்கப்படும் சூரை மீன்களுக்கு கூடுதல் விலை பெற்றிட மீனவர் மீன் உற்பத்தி நிறுவன FFPO தொகுப்புகளை நிறுவுவதற்கான முன்னோடி திட்டம் 2 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
  • மீனவ மகளிர் உலர் மீன் உற்பத்தியாளர்கள் குழுக்களின் தொகுப்புகள் மூலம் உயிர் தொழில்நுட்ப சூரிய ஒளி பசுமை மீன் உலர் நிலையங்கள் நிறுவுவதற்கான முன்னோடி திட்டம் ரூ.2 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
  • மண்ணெண்ணெயினால் இயக்கப்படும் வெளிப்பொருந்தும் இயந்திரங்களை திரவ எரிவாய்வு மூலம் இயக்கப்படும் இயந்திரங்களாக மாற்றும் பசுமை கடல் வளத்திட்டம் ரூ. 2 கோடியே 50 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
  • நாகப்பட்டினம் மாவட்டம், செருதலைக்காடு மீனவ கிராமத்தில் உள்ள மீன் இறங்கு தளம் ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மறுசீரமைப்பு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்திக்க மறுத்த கனிமொழி எம்பி! - Kallakurichi Illicit Liquor issue

ABOUT THE AUTHOR

...view details