தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தி.மலை மண்சரிவில் உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" - தவெக தலைவர் விஜய் உருக்கம்! - TIRUVANNAMALAI LANDSLIDE INCIDENT

திருவண்ணாமலை மண் சரிவில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகள் நடைபெற்ற இடம், விஜய்
மீட்புப் பணிகள் நடைபெற்ற இடம், விஜய் (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2024, 11:02 PM IST

சென்னை :ஃபெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள மலையில் இருந்து பாறை உருண்டு, அடிவாரப்பகுதியான வ.உ.சி நகரின் மீது விழுந்தது.

பாறை விழுந்ததில், மண் சரிவு ஏற்பட்டு, வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இந்த இடர்பாடுகளில் 7 பேர் சிக்கினர். இரவு எட்டு மணி நிலவரப்படி, 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மீதி இருக்கும் இரண்டு பேரை மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், மண் சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, நிவாரண தொகையாக ரூ.5 லட்சம் நாளை ( டிச 2) இரவுக்குள் வழங்க, மாவட்ட ஆட்சியருக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்ட செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும்.

இதையும் படிங்க :புதைந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 5 பேர்.. அதிர்ச்சியில் உறைந்த திருவண்ணாமலை!

இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் மத்திய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details