சென்னை: 18வது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் சேர்த்து 40 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றியது.
இந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட சிதம்பரம்(திருமாவளவன்) மற்றும் விழுப்புரம்(முனைவர் ரவிக்குமார்) தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. இதனால் அந்த கட்சி மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.
அதேபோல், நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் 40 தொகுதிகளில் களம் கண்டு எந்த தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும் அந்த கட்சி 8.19 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்தின் விதிபடி அந்த கட்சிக்கு மாநில கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய், விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகளுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவு, "நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவரது பணிகள் சிறக்கவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோருக்கும் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விசிக, நாதக கட்சிகளுக்கு மறக்க முடியாத 2024 தேர்தல்! - ஏன் தெரியுமா? - Ntk Vck Future Political