சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 19 மாவட்டங்களுக்கு முதல்கட்டமாக பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, அதன் முதல் மாநில மாநாட்டையும் சில மாதங்களுக்கு முன் விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதே தமது இலக்கு என்றும் அந்த மாநாட்டில் பிரகடனப்படுத்தி, தமிழக அரசியலில் அனலை பற்ற வைத்த விஜய், தேர்தலுக்கு முன் தவெகவை அமைப்பு ரீதியாக வலுவாக கட்டமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தவெகவின் 19 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களை நியமித்து இன்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர், இராணிப்பேட்டை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம், ஈரோடு கிழக்கு, மேற்கு மற்றும் மாநகர் மாவட்டம், கடலூர் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம், கரூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம், கோவை தெற்கு மற்றும் மாநகர் மாவட்டம், சேலம் மத்திய மாவட்டம், தஞ்சாவூர் தெற்கு மற்றும் மத்திய மாவட்டம், நாமக்கல் மேற்கு மாவட்டம் ஆகிய கட்சியின் 19 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனத்தில், மாவட்டச் செயலாளர், மாவட்ட இணைச் செயலாளர், பொருளாளர், இரு துணைச் செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் அடங்குவர்.
இதுதொடர்பாக, தவெகவின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.' என்று விஜய் தெரிவித்துள்ளார்.