சென்னை:மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவன தலைவருமான எம்ஜிஆரின் 37 வது நினைவு நாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக, அமமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி சார்பில் மலர் வளையம் வைத்து இன்று மரியாதை செலுத்தப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி முன்னிலையில் கழக நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இதனை தொடர்ந்து சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "சாமானிய மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் சத்துணவு தந்த தலைவர் எம்.ஜி.ஆர்.
சசிகலா, டிடிவி தினகரன் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu) 2026 இல் யார் முதலமைச்சர் ஆனாலும், தேர்தல் முடிவு என்பது மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதைப் போல. நிச்சயம் ஜெயலலிதா ஆட்சியை நாங்கள் அமைப்போம். எங்கள் தலைவர்கள் மக்களுக்கு செய்த திட்டத்தை போல் திமுக செய்யவில்லை. அதனால்தான் ஜெயலலிதாவின் ஆட்சியை நான் அமைப்பேன் என்று சொல்லி வருகிறேன்.
மக்களிடம் திமுகவுக்கு எதிரான மனநிலை இருக்கிறது. அதை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது தான் என்னுடைய வேலை. நான்தான் அதை செய்கிறேன் என்று சொல்கிறேனே. நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள் நான் செஞ்சு காட்டுகிறேன். எங்க தலைவர்கள் எப்போதும் ஏழை,எளியவர்களின் பக்கம் தான் இருப்பார்கள்." என்று சசிகலா தெரிவித்தார்.
அதிமுக ஒன்றிணையுமா ? என்ற கேள்விக்கு, "நல்லது நடக்கும்" என்று சசிகலா கூறினார்.
எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றும், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் அவரின் ஆசையை சொல்லி இருக்கிறார்." எனவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "திமுக ஆட்சியின் மீது மக்கள் மிகுந்த கோபத்திலும் வருத்தத்திலும் உள்ளனர், இது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியாக அமையும். அதிமுக பொது செயலாளர் பழனிச்சாமி தலைமையில் அதிமுக பலவீனமாக உள்ளது. இபிஎஸ் அணியிடம் இரட்டை இலை உள்ளது என உண்மையான தொண்டர்கள் தங்களை ஏமாற்றிக் கொண்டு அதிமுகவில் உள்ளனர். இப்போது சரியான முடிவை எடுக்க வேண்டும் என அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
தொண்டர்களுடன் இணைந்து 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்போம். சுயநலத்துடன் உள்ள பழனிச்சாமி திருந்த வேண்டும் இல்லை என்றால் திருத்தப்படுவார்." என்று டிடிவி தினகரன் எச்சரித்தார்.
தொடர்ந்து முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் .
முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், மாவட்ட அதிமுகச் செயலாளர்கள் எம் எம் பாபு, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.