தேனி: நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை முடிவடைந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேனி தொகுதியில் போட்டியிடும் தனது கணவர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக, அவரது மனைவி அனுராதா தினகரன், இரண்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டு, மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பெரியகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மாபட்டி, மீனாட்சிபுரம், சக்கரப்பட்டி, சாவடிப்பட்டி, ஜல்லிபட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று பிரச்சாரத்தை மேற்கொண்ட டிடிவி தினகரனின் மனைவி அனுராதா தினகரன், குக்கர் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் பேசிய அனுராதா தினகரன், “தனது கணவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது எவ்வாறு செயல்பட்டுள்ளார் என்பது கிராம மக்களின் வரவேற்பிலிருந்து தெரிகிறது. 14 ஆண்டுகள் கழித்து திரும்ப வந்த நிலையில், எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் அவர் மீது மக்கள் நீங்கள் காட்டும் பாசமும், பிரிவும் எங்களை திக்குமுக்காட வைத்துள்ளது.