திருச்சி: திருச்சி தென்னுார் உழவர் சந்தை மைதானத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய டி.டி.வி.தினகரன், “காமராஜர் போன்ற தலைவர்கள் இருந்த தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் சூழல் மோசமாகி உள்ளது.
பணத்திற்காக மக்கள் வாக்களிக்கும் நிலையை இன்றைய அரசியல்வாதிகள் ஏற்படுத்தி விட்டார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் வாக்குக்கு பணம் கொடுத்து ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். காமராஜர் வாழ்ந்த இந்த பூமியில் நல்ல ஆட்சியை, ஊழலற்ற, மது விலக்கு உள்ள ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பது தான் நம் எண்ணமாக உள்ளது.
வேலைவாய்ப்பின்மையால் போதைக்கு அடிமையாகி இன்று இளைஞர்கள் கூலிப்படையாக மாறி உள்ளனர். காமராஜர் அனைத்து ஊர்களிலும் அரசுப் பள்ளிகளை கொண்டு வந்தார். மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தினார். அந்த கல்வி தான் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலமாக வளர காரணம். தமிழ்நாட்டில் விவசாயம் பெருகவும் 8 அணைகளை காமராஜர் கட்டினார். பெல் உள்ளிட்ட தொழிற்சாலைகளை உருவாக்கியவர் காமராஜர். ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை தந்தவர் காமராஜர்.