தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுகவுக்கு முடிவுரை எழுதுவார் ஈபிஎஸ்'... ஓபிஎஸ் - டிடிவி தனித்தனியே சூளுரை..! - TTV DHINAKARAN

இரட்டை இலை சின்னம் இறுதியாக தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுகவுக்கு ஈபிஎஸ் முடிவுரை எழுதி விடுவார் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2024, 4:49 PM IST

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர் ஜெயலலிதா

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ. பன்னீர் செல்வம், '' இதற்கு முன்பு இரட்டை இலை தொடர்பான பல வழக்குகளில், தற்காலிகமாக தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறுதியாக சிவில் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பு இறுதியாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, இறுதியாக இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும். அதிமுகவுக்கு வந்த சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றியவர் ஜெயலலிதா.

மக்களவையில் 3-வது பெரிய கட்சியாக அதிமுகவை உயர்த்தியவர். அவரின் தியாகத்துக்கு உச்சபட்ச பதவி வழங்கப்பட்டது. அதிமுகவின் நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்துள்ளனர். இதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதனால் தான் அவர்கள் சந்தித்த தேர்தலில் எல்லாம் தோல்வியை தழுவியுள்ளனர் என குற்றம் சாட்டினார்.

இரட்டை இலை வழக்கு

சென்னை உயர் நீதிமன்றம், நிலுவை வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பம் மீது பன்னீர்செல்வம் தரப்பிடமும் கருத்து கேட்டு தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவுக்கு முடிவுரை

அதேபோல, ஜெயலலிதா நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியதை செலுத்தினார். இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ''2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவோம்.
எத்தனை நூற்றாண்டு ஆனாலும் எம்.ஜி.ஆர் லட்சியங்கள், கொள்கைகளை கொண்டு செல்லும் இயக்கமாக இந்த இயக்கம் செயல்படும் என தொண்டர்கள் மீது நம்பிக்கை கொண்டு ஜெயலலிதா சூளுரைத்தார். அந்த வகையில், அந்த கொள்கைகளை கொண்டு செல்லும் இயக்கமாக அமமுக உள்ளது. தேர்தல் தோல்வி இருந்தாலும் கட்சி தொடங்கிய நேரத்தில் இருந்த அதே உத்வேகமாக அமாமுக செயல்பட்டு வருகிறது.

2026இல் அதிமுக ஆட்சி என்பது கனவில் மட்டுமே நடக்கும். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுகவுக்கு முடிவுரை ஈபிஎஸ் எழுதி விடுவார். சுயநலம் காரணமாக, பண வெறி, பதவி வெறியில் முதல்வர் பதவியை பயன்படுத்தி கட்சியை கையகப்படுத்தி உள்ளார். எனவே 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின் கட்சிக்கு முடிவுரை எழுதி விடுவார்'' என தெரிவித்தார்.

சசிகலா, டி.டி. வி. தினகரன், ஓபிஎஸ் இணைப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றாகத்தான் உள்ளோம். ஒரு சிலர் பதவி வெறியால் ஜெயலலிதா தொண்டர்கள் ஒன்றினைவதில் கால தாமதம் ஆகிறது. ஆனால், 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் முயற்சி செய்து வருகிறோம்'' என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details