சென்னை: புதிய பால் அறிமுகம் என்ற பெயரில், அளவை குறைத்து விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் நூதன மோசடியில் ஈடுபடுவதா? சில்லறை தட்டுப்பாட்டை காரணம் காட்டி பொதுமக்களின் மீது கூடுதல் சுமையை ஏற்றும் முடிவை ஆவின் நிர்வாகம் கைவிட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,” ஆவின் நிர்வாகத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் பெயரில் "பிளஸ்" எனும் பெயரை சேர்த்து லிட்டருக்கு ரூ.11 வரை உயர்த்தப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
கண்டனம்:500 மி.லிஅளவு கொண்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் அளவை 450 மி.லி குறைத்திருப்பதோடு, சில்லறை தட்டுப்பாட்டை காரணம் காட்டி அதன் விலையையும் லிட்டருக்கு ரூ. 44 லிருந்து ரூ.55 ஆக உயர்த்தியிருக்கும் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
பால் உற்பத்தியாளர்களுக்கு துரோகம்:பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்ற உற்பத்தியாளர்களின் நீண்டகால கோரிக்கையை பரிசீலனை கூட செய்ய முன்வராத திமுக அரசு, ஆண்டுக்கு இருமுறை பால் மற்றும் பால் பொருட்களின் விலையை உயர்த்துவது உற்பத்தியாளர்களுக்கு இழைக்கும் துரோகம்.