தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி தாயுமானவர் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு! - Trichy Chithirai Festival - TRICHY CHITHIRAI FESTIVAL

Trichy Chithirai Festival: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

Trichy Chithirai Festival
திருச்சி சித்திரைத் திருவிழா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 11:14 AM IST

திருச்சி:திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று தொடங்கி ஒவ்வொரு நாளும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.

இதில் 5ஆம்‌ நாளன்று சிவபக்தியில் சிறந்த செட்டிப் பெண் ரத்தினாவதிக்கு, அவளது பேறுகாலத்தில் தாய் வர முடியாத காரணத்தால், அவளது தாயாகச் சிவபெருமான் வந்து மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. 6ஆம் நாளன்று சுவாமி - அம்பாளுக்குத் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து 9ஆம் நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு மேல் மேஷ லக்கனத்தில் சுவாமி - அம்பாள் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு செய்யப்பட்டு, மலைக்கோட்டை உள் வீதி வழியாக 5.40 மணிக்குத் தாயுமான சுவாமி உடனுறை மட்டுவார் குழலம்மை பெரிய தேரிலும், தாயார் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.

பின்னர், 6.10 மணிக்குத் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தேரோட்டத்தைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சிறிய சப்பரத்தில் முன்னே செல்ல, அதைத் தொடர்ந்து கோயில் யானை லட்சுமியும் செல்ல, பெரிய தேர் மற்றும் சிறிய தேர் ஆகிய இரண்டையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், பல்வேறு வகையான மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் வெகு விமர்சையாக தேரோட்டம் நடைபெற்றது. இந்த சித்திரைத் திருவிழாவில் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் கலந்து கொண்டு சிவ சிவா, தாயுமான ஈசா, ஆரூரா என்ற கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். மேலும், தேர் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே பக்தர்களுக்குப் பாலும், குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:ஊரோடும் மதுரையில் தேரோட்ட திருவிழா! பக்தர்கள் வடம் பிடிக்க கோலாகலமாக துவங்கியது.. - Madurai Chithirai Festival

ABOUT THE AUTHOR

...view details