தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“சீமான், சாட்டை துரைமுருகனால் என் உயிருக்கு ஆபத்து” - திருச்சி சூர்யா மனு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திருச்சி சூர்யா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு அளித்துள்ளார்.

திருச்சி சூர்யா, சீமான்
திருச்சி சூர்யா, சீமான் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 2:28 PM IST

மதுரை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனால் தன் உயிருக்கு ஆபத்து. எனவே, தனக்கும், தனது குடும்பதினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி திருச்சி சூர்யா வழக்கு தொடர்ந்துள்ளார்.

திருச்சி சூர்யா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நான் திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது அப்பா திருச்சி சிவா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். நான் பாரதிய ஜனதா கட்சியில் OBC அணியில் மாநில பொதுச் செயலாளராக இருந்து வந்தேன். மேலும் சமூக ஊடகங்களில், தொலைக்காட்சி விவாத மேடைகளிலும் கலந்து கொண்டு வருகிறேன்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து 15 ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தேன். இதனால், சீமான் என் மீது பழி வாங்கும் நோக்கோடு செயல்படுகிறார். மேலும், இதே கட்சியைச் சார்ந்த சாட்டை துரைமுருகன் என்பவரும் எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர்கள் என் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் தீட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கு; பழைய சட்டப்படி விசாரிக்க தயாநிதி மாறன் தரப்பு வாதம்!

மேலும், நான் குடியிருக்கும் வீட்டை கடந்த 2022ஆம் ஆண்டு சிலர் தாக்குதல் நடத்தினர். அது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. எனவே, எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி கடந்த மாதம் காவல்துறைக்கு மனு மூலம் விண்ணப்பித்திருந்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அதற்கு அரசு விதிக்கும் உரிய கட்டணத்தையும் செலுத்த தயாராக உள்ளேன். எனவே, எங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் வழக்கு குறித்த விவரங்கள் முழுமையாக தரவில்லை. எனவே, கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. இதனையடுத்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details