திருச்சி : டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கப்பதற்காக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா திருச்சியில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லி செல்வதற்கு முன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் ஒரு பகுதியாக, இந்திய அரசமைப்பு சட்டம் குறித்து மக்களவையில் விவாதம் நடந்து முடிந்துள்ளது. நாளை மாநிலங்களவையில் விவாதம் நடக்க இருக்கிறது. நாடாளுமன்ற அவைக்கு ஒரு நாள் கூட வராமல், அவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பவர் பிரதமர் மோடி.
திருச்சி எம்பி சிவா பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu) மணிப்பூர் விவகாரம், அதானி விவகாரம் உள்ளிட்ட எந்த பிரச்சனையை எழுப்பினாலும், பிரதமர் அவைக்கு வந்து பதில் சொல்வதில்லை. அவையில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிப்பதில்லை. ஆளுங்கட்சியினர் பேசுவது மட்டும் தான் அவைக்குறிப்பில் இடம் பெறுகிறது. மற்றவர்கள் பேசுவது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் அமளி செய்வது போன்ற தோற்றம் மட்டுமே அவைக்கு வெளியே பரப்பப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் ஒரு முறை கூட பிரதமர் மோடி, பத்திரிக்கையாளர்களை நேரில் சந்தித்து பேசியதில்லை.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அவசர நிலை இருந்தது. இப்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நடைமுறையில் உள்ளது. பத்திரிக்கையாளர்கள் மீதான கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. ஜாமீனில் வெளிவர முடியாத வகையிலான வழக்குகளில் பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மணிப்பூரில் 200க்கும் மேற்பட்ட நாட்கள் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கரையாக்கப்பட்டு இருக்கிறது. லட்சக்கணக்கானோர் முகாம்களில் இருக்கின்றனர்.
இதற்கு பதில் சொல்ல வேண்டிய, இதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய மணிப்பூர் முதலமைச்சரும், பிரதமரும் மவுனம் சாதிக்கிறார்கள். இவர்கள் கேள்வி கேட்க ஆள் இல்லா இடத்தில் அலங்காரமாக பேசுகிறார்கள்.
இதையும் படிங்க :ஒரே நாடு ஒரே தேர்தல்; "இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் நடவடிக்கை" - கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டறிக்கை!
நாளை மக்களவையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை நாடாளுமன்ற கூட்டுக்குழு விவாதத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவோம். இது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் யாரை விசாரித்து வருகிறார்கள் என்பது தெரியவில்லை. பல மொழிகள், பல பண்பாடு, பல கலாச்சாரம் உள்ள நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் இல்லை. இதனை எதிர்ப்பது எங்கள் கடமை.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்போதும் கூட்டணி அரசு தான் உள்ளது. கூட்டணியில் சிலர் விலகினால் இந்த ஆட்சி கலைக்கப்படும். மாநில அரசுகளை கலைப்பதற்கான 356வது சட்டப்பிரிவு இருக்கும் வரை 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது சாத்தியமில்லை.
கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டாலும் அங்கு எங்கள் கருத்தை சொல்லுவோம். தற்போது மழை, வெள்ள நிவாரணமாக ரூ.2,400 கோடியை தமிழக அரசு கேட்டிருந்தது. அதில், ரூ.900 கோடியை மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது.
தமிழக அரசு இதுவரை வெள்ள நிவாரணமாக மொத்தம் ரூ. 37 ஆயிரத்து 900 கோடி கேட்டுள்ளது. அதில், 267 கோடி மட்டுமே கொடுத்துள்ளார்கள். மாநில உரிமைகளை கேட்டுப் பெறுவதில் எந்த காலத்திலும் திமுக அரசு சமரசம் செய்து கொள்ளாது. வெள்ள நிவாரண நிதி மக்களுக்கு எவ்வளவு வழங்குவது என்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் உரிய முடிவெடுப்பார்" என தெரிவித்தார்.