திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ செளந்தரபாண்டியன் தொடர்ந்து 2006, 2011, 2016, 2021 என நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், இவர் திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளராவார்.
இந்நிலையில், எம்எல்ஏ செளந்தரபாண்டியன் கடந்த சில மாதங்களாக பெரும்பாலும் அரசு விழாக்கள் மற்றும் அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் முக்கிய கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என கூறப்படுகிறது. இந்தச் சூழலில், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான இடங்களை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் எம்எல்ஏ செளந்தரபாண்டியன் பங்கேற்காத நிலையில், ஆய்வு நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமைச்சர் கே.என்.நேருவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த பதிவிற்கு எம்எல்ஏ சௌந்தரபாண்டியனின் முகநூல் கணக்கில் இருந்து கமெண்ட் செய்யப்பட்டிருந்தது.
அதில், ''திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்க்கூடிய செளந்தரபாண்டியன் இயற்கை எய்தி விட்டதால் அந்த தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. லால்குடி எம்எல்ஏ முகநூல் கணக்கில் இருந்து இப்படியான ஒரு கமெண்ட் செய்யப்பட்டிருக்கும் விஷயம் வைரலான நிலையில், திமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இதுகுறித்து வெளியான தகவலில், தனது தொகுதியில் நடைபெறும் கட்சி மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் தன்னை அழைக்காததால் சௌந்தரபாண்டியன் அதிருப்தியில் இருந்து வந்ததாகவும், அந்த நேரத்தில் அமைச்சர் கே.என்.நேரு, லால்குடி தொகுதியில் மேற்கொண்ட ஆய்வு குறித்து புகைப்படங்களுடன் பதிவு செய்திருக்கிறார்.
அதற்கு செளந்தரபாண்டியன், கவலை தெரிவிக்கும் விதமாக இப்படி ஒரு கமெண்ட் பதிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த கமெண்ட் சர்ச்சையானதால் பின்னர் நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சம்பவம் திருச்சி திமுக மற்றும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பேசும் பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க:விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிப்பு!