தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 2022 - 2023ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கான 39ஆவது பட்டமளிப்பு விழா நேற்று (மார்ச் 12) நடைபெற்றது.
அதில், சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி இந்திய மேலாண்மை நிறுவன (Trichy IIM Director) இயக்குநரும், பேராசிரியருமான முனைவர் பவன் குமார் சிங் கலந்து கொண்டு பேசினார். அதனைத் தொடர்ந்து, இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் என 1,324 நபர்களுக்குப் பட்ட சான்றிதழ்களை வழங்கினார்.
முன்னதாக விழா மேடையில் பேசிய பவன் குமார் சிங், குந்தவை நாச்சியார் கல்லூரியின் வரலாற்றுப் பெயர் சிறப்பை நினைவு கூர்ந்தும், திருக்குறள் உள்ளிட்ட இலக்கியப் படைப்புகளைக் கொண்ட இந்தியா, நாகரிகம் மற்றும் பாரம்பரியத்தின் அறனாக விளங்குகின்றது என்றார்.
மேலும் பட்டம் பெற்ற மாணவிகளையும், அவர்களின் பெற்றோர்களையும், பேராசிரியர்களையும் பாராட்டி நாட்டின் முன்னேற்றத்தில் அவர்களின் பங்கையும் பொறுப்பையும் வலியுறுத்திப் பேசினார். கல்லூரியில் அறிவியல், கலை பாடம், மேலாண்மை மற்றும் வணிகவியல் பட்ட வகுப்புகள் இருப்பதைப் பாராட்டி, வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தோடு, மனிதன் ஈடு கொடுத்து தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும், தொடர் கற்றலின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறி, ஒவ்வொரு பட்டம் பெற்ற பெண்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பெரும்பங்காற்றிட வாழ்த்துக்களைக் கூறினார்.
மேலும் பல்கலைக்கழக அளவில் முதல் தரம் பெற்ற இரு மாணவிகள் உள்ளிட்ட தரம் பெற்ற 29 மாணவிகளுக்குப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன. கல்லூரியில் நிறுவப் பெற்றுள்ள அறக்கட்டளைகளிலிருந்து தகுதியான மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர், தேர்வு நெறியாளர் மலர்விழி, பல் கலைக்கழகப் பேரவை உறுப்பினர் இந்திராகாந்தி உள்ளிட்ட துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உலகையே புரட்டிபோட்ட கரோனா.. உலகின் மகிழ்ச்சியற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா!