தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது திருச்சி புதிய விமான முனையம்; பயணிகளுக்கு இனிப்புகள் கொடுத்து வரவேற்பு! - Trichy airport new terminal - TRICHY AIRPORT NEW TERMINAL

Trichy airport new terminal: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததைத் தொடர்ந்து, முனையத்தில் தரையிறங்கிய முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் மற்றும் விமான பயணிகளுக்கு இனிப்புகள் கொடுத்து விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.

திருச்சி புதிய விமான முனையம்
திருச்சி புதிய விமான முனையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 1:48 PM IST

திருச்சி: ஆயிரத்து 112 கோடி ரூபாய் செலவீனத்தில், 75 ஆயிரம் சதுர மீட்டரில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய புதிய முனையம், இன்று காலை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட்:இம்முனையத்திற்கு முதல் விமானமாக சென்னையில் இருந்து வந்த இண்டிகோ விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து (வாட்டர் சல்யூட்) வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும், விமான பயணிகளுக்கு இனிப்புகள் மற்றும் பூச்செண்டு விமான நிலைய அதிகாரிகள் கொடுத்து புதிய முனைய செயல்படும் நிகழ்வை கொண்டாடி வருகின்றனர்.

திருச்சி புதிய விமான முனையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஆயிரத்து 112 கோடி ரூபாயில் புதிய டெர்மினல் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான திட்டத்தை 2019ஆம் ஆண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 3 ஆண்டுகளுக்குள் புதிய முனையம் கட்டி முடிக்கப்பட்டு, பிரதமர் மோடி கடந்த ஜனவரி 2ஆம் தேதி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு வசதிகள்: இந்த முனையத்தில், ஒரே நேரத்தில் 3500க்கும் மேற்பட்ட பயணிகள் கையாள முடியும். 750 கார்கள், 250 டாக்சிகள், 10 பஸ்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. புறப்பாடுக்காக 10 வாயில்கள், வருகைக்காக 6 வாயில்கள், 60 செக்-இன் மையங்கள், இமிகி ரேஷன் பிரிவுக்காக தலா 40 கவுண்டர்கள், 15 எக்ஸ்ரேமெஷின்கள், 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

26 இடங்களில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் மற்றும் பயணிகளின் உடமைகளை எடுத்து வர சாய்வுதள கன்வேயர் பெல்ட்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், புதிய முனையத்தில் தமிழக கலாச்சார, பண்பாடு மற்றும் திருவிழாக்களை மையமாகக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம், புதிய முனையத்தின் முகப்பில் வண்ணமயமாக பயணிகள் கண்களைக் கவரும் வகையில் உள்ளது.

இதேபோல, வருகை புறப்பாடு, பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இந்த முனையம் அமைக்கப்பட்டு உள்ளது.

சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் விமான நிலையத்தின் மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர 75 கோடி ரூபாய் செலவில் 42.5 மீட்டர் உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் விமான ஓடு பாதையின் எந்த ஒரு பகுதியையும் 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும்.

பயணிகள் மகிழ்ச்சி: விமான நிலைய புதிய முனையம் மிகவும் பிரமாண்டமாக இருப்பதாகவும், பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் இனிப்புகள் மற்றும் பூச்செண்டு கொடுத்து வரவேற்று மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், தமிழக கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஓவியங்கள் கண்களை கவரும் வகையில் உள்ளதாகவும் விமான பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கழுகுகள் மரணம்; விவசாயிகள் கால்நடைகளுக்கு சில மருந்துகளை வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியதாகத் தமிழக அரசு சென்னை ஐக்கோர்டில் தெரிவிப்பு! - VULTURES DEATH CASE

ABOUT THE AUTHOR

...view details