திருவாரூர்:நீடாமங்கலம் வட்டத்திற்குட்பட்ட எட கீழையூர் வடக்கு உடையார் தெரு பகுதியில் சுமார் 35 குடும்பங்களை சேர்ந்த இருளர் பழங்குடியின மக்கள் 50 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு இருளர் இன சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என மனு கொடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
அவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளி சீருடையுடன் அழைத்து வந்து, குடும்ப அட்டை. ஆதார் அட்டை. வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இருளர் இனத்தைச் சேர்ந்த தங்களுக்கு அம்பலக்காரர் என்கிற சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதே சாதி சான்றிதழ் தான் தங்களது குழந்தைகளுக்கும் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் கூறுவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், தங்களுக்கு இருளர் பழங்குடியின சாதி சான்றிதழ் வேண்டுமெனவும், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வலங்கைமானை சேர்ந்த ஒருவருக்கு இருளர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தாங்கள் கேட்டால் திருவாரூர் மாவட்டத்தில் இருளர் இனமே கிடையாது என்று அதிகாரிகள் பதில் கூறுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதில், ஒரு குடும்பத்தில் கணவனுக்கு அம்பலக்காரர் என்கிற சாதி சான்றிதழும் மனைவிக்கு இருளர் என்கிற சாதி சான்றிதழும் இருப்பதாக கூறப்படுகிறது. கடலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள தங்களது உறவினர்களுக்கு இருளர் சாதி சான்றிதழ் வழங்கப்படுவதாகவும் தங்களுக்கு அம்பலக்காரர் என வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.