சென்னை: விபத்தில்லா சென்னையை உருவாக்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து காவல்துறை சார்பில் "ஜீரோ ஆக்சிடெண்ட் டே" என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஜீரோ ஆக்ஸிடென்ட் டே (ZAD) போக்குவரத்து தொடர்பான இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டி நிகழ்ச்சியை சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில், சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் துவங்கி வைத்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர், "சென்னையில் விபத்து இல்லாத வண்ணம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்து காவல் சார்பாக "Zero Accident Day" கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் ஒத்துழைக்கும் படியும், சாலை விதிமுறைகளை கடைபிடிக்கும்படியும் பல இடங்களில் விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
அதனடிப்படையில் ஒன்றாக இன்று சென்னை போக்குவரத்தில் காவல் சார்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டியில் நிகழ்ச்சி துவங்கிவிடும். போக்குவரத்து பாதுகாப்பு, போக்குவரத்து விழிப்புணர்வு இதை சார்ந்து ரீல்ஸ் எடுத்து, எங்களது போக்குவரத்து காவல்துறை சார்பாக ஒரு கியூ ஆர் கோட் கொடுக்கப்படும் அதில் ஹேக் செய்து வீடியோவை பதிவிடலாம்.
இந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டி ஆக.9ஆம் தேதி துவங்கி இந்த மாதம் 20ஆம் தேதி வரை நடைபெறும். இதில் மூன்று வித பரிசுகள் அளிக்கப்படுகிறது. இந்த ரீலை அதிகப்படியாக பார்த்திருந்தால் அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், சிறந்த உள்ளடக்கம் உள்ள வீடியோக்களுக்கு ரூ.1 லட்சம் இரண்டாம் பரிசாகவும், ரூ.50 ஆயிரம் மூன்றாம் பரிசாகவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பாக அளிக்கப்படும்.